கூடங்குளம்: வளர்ச்சி அரசியல் வன்முறை

by Rajan Kurai Krishnan

மக்களின் போர்க்குணம் என்பது அரசியலின் அடிப்படை ஆற்றல். எல்லா காலங்களிலும் வரலாறு என்று எதையாவது யோசிக்க விரும்புபவர்களுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது மக்கள் திரண்டெழுந்து தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் தருணங்கள்தான். அந்த வகையில் கூடங்குளம் போராட்டம் நம் காலத்தின் முக்கியமான தருணம் என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. தங்கள் வாழ்வை, வாழ்வாதாரங்களை ஒரு சிறு விபத்து அல்லது அக்கறையற்ற நிர்வாகத்தின் மூலம் நிரந்தரமாக நாசம் செய்யக்கூடியது அணு உலை என்பதை உணர்ந்த மக்கள், அரசின் மிருக பலத்திற்கும் அடக்குமுறைக்கும் அஞ்சாது போராடுவது மனதை தொடுகிறது.

ஆனால் அவர்கள் மீது வன்முறையை செலுத்துவது போலீஸ் என்றோ, அரசு என்றோ மட்டும் புரிந்துகொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த வன்முறையின் ஊற்றுக்கண், அந்த வன்முறையை நியாயப்படுத்தும் கருத்தொப்புமை. அந்த கருத்தொப்புமையின் பெயர் வளர்ச்சி அரசியல். வளர்ச்சி அரசியலை விமர்சித்து நிராகரிக்கும், அரசியலை மாற்றி வடிவமைக்கும் கருத்தியல் என்பது இன்று தெளிவற்றும், உருவாகாமலும், பலவீனமாகவும் உள்ளதால் கருத்தியல் ரீதியாக வலுவற்ற ஒரு அடித்தட்டு மக்கள் போராட்டமாகத்தான் கூடங்குளம் போராட்டத்தை கணிக்க முடியும்.

அணு உலையின் பாதுகாப்பு குறித்து எத்தனை சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தால் என்ன? கூடங்குளம் மக்களையெல்லாம் ஜனாதிபதி மாளிகைக்கு கூட்டிச்சென்று மூன்று நாள் கருத்தரங்கம் நடத்தினால்தான் என்ன? அடிப்படையில் அணு உலை மிக ஆபத்தானது என்பதும், ஆனால் வளர்ச்சி அரசியல் அதை நிர்மாணித்தே தீரும் என்பதிலும் என்ற மாற்றமும் இல்லை. நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் வளர்ச்சி அரசியலை முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டன. இந்த நிலையில் தேசமெங்கும் கோடிக்கணக்கான மக்கள், அதாவது தொழிற்சங்க கட்டமைப்புகள், நகர்புற மத்தியதர மக்கள், மாணவர்கள் அனைவரும் திரண்டு போராடினால்தான் வளர்ச்சி அரசியலின் மேலாண்மையை கட்டுப்படுத்தி அணு உலையை தடுக்க முடியும். ஆனால் முகப்புத்தகத்தில் வெளிப்படும் கருத்துக்களை பார்த்தாலே தெரியும், வளர்ச்சி அரசியல் எல்லோர் மனதையும் ஆக்கிரமித்திருப்பது. உதயகுமாருக்கு பின்னால் அந்நிய நிதியும், பன்னாட்டு கிறித்துவ அமைப்புகளும் இருப்பதாக கூசாமல் சொல்கிறார்கள். அந்நிய நிதி மற்றும் இன்றைய காந்தி வல்லுனர் ஜெயமோகன் கூடங்குளம் விஷயத்தில் அணு உலையை எதிர்த்தாலும், அப்துல் கலாம் என்ற கண்மூடித்தனமான அணு உலை ஆதரவாளர் உன்னதமான மனிதர், அவரை திட்டுபவர்கள் தேசத்துரோகிகள் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். கலாம் அணு உலையை ஆதரிப்பது தவறானாலும் அவருடைய கருத்துக்களுக்கு உண்மையாக இருப்பதால் உன்னத மனிதர். அணு உலை எதிர்ப்பாளர்கள் அவர்கள் கருத்தின் அடிப்படையில் அவரை தாக்கினால் அவர்கள் தேசத்துரோகிகள். இதுதான் தமிழில் வெளிப்படும் சிந்தனையின், தர்க்கத்தின் இலட்சணம்.

உண்மையில் நான் அறிந்தவரை வளர்ச்சி அரசியல் என்றால் என்ன என்பதிலேயே சிந்தனைத் தெளிவு பரவலாக இல்லை. எனக்கும் இல்லை. நான் அரை குறையாக சில பலதை படித்ததன் விளைவாக உருவான சில கேள்விகளை மீண்டும் மீண்டும் பகிர்ந்துகொள்வது மட்டுமே என்னுடைய சாத்தியமாக இருக்கிறது. ஃபுகுஷிமா அணு உலை வெடிப்பிற்கு பின் தீராநதியில் ஒரு கட்டுரை எழுதினேன். அதைப்படித்தவர்கள் என்ன நினைத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பலருக்கு இந்த கேள்விகளில் ஆர்வமே இல்லை.

என்னுடைய கேள்விகள் சுலபமானவை. ஒரு நாடு ஏன் பொருளாதார ரீதியாக வளர வேண்டும்? மக்களுக்கெல்லாம் உணவு, உடை, உறைவிடம் வேண்டும் என்றால் புரிகிறது. கலை, இலக்கியம் முதலிய பண்பாட்டு நடவடிக்கைகள் சிறக்க வேண்டுமென்றால் புரிகிறது. மக்களிடையே முரண்பாடுகளும் வன்முறையும் குறைந்து அன்பான சகவாழ்விற்கான ஆற்றல் அதிகரிக்க வேண்டும் என்றால் புரிகிறது. சுருக்கமாகச் சொன்னால் பொருளாதார தன்னிறைவு என்றால் புரிகிறது. பொருளாதார வளர்ச்சி என்றால் புரியவில்லை. தேசத்தின் மொத்த உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் 9% அதிகரிக்க வேண்டும் என்றால் என்ன என்றே எனக்கு புரியவில்லை. எதை உற்பத்தி செய்யவேண்டும்? எதற்காக உற்பத்தியை அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும்? இப்படி உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தால் எல்லா மக்களும் சுபிட்சமாக சந்தோஷமாக இருப்பார்களா? அப்படி ஒன்றும் நடக்கக் காணோமே? உற்பத்தி அதிகரிப்பது என்றால் ஆதிவாசிகளும், பழங்குடியினரும் வாழ்வாதாரங்களை இழப்பது என்பதுதான் பொருளா? தேசத்தின் உற்பத்தி அதிகரிப்பதால் அவர்களுக்கு என்ன நன்மை? பெருமளவு கிராமங்களில் விவசாயக் கூலிகளாக உள்ள அடித்தட்டு மக்களான தலித் மக்களுக்கு என்ன நன்மை? தேசத்தின் உற்பத்தி இப்படி எத்தனை ஆண்டுகள் அதிகரிக்க வேண்டும்? இன்னம் பத்தாண்டுகள் தேசம் வளர்ந்தால் போதுமா? நூறாண்டுகள் வளர்ந்தால் போதுமா? இல்லை எப்போதும் ஓயாமல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்? வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்ந்து முடித்துவிட்டனவா? அப்படியென்றால் அமெரிக்கா ஏன் கடுமையாக கடன்வாங்குகிறது? அங்கே இலவச உணவு கூப்பன்களை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை ஏன் அதிகரிக்கிறது? அமெரிக்கா திவாலாகிவிடும் என்பது உண்மையா?  ஃபிரான்சு ஏன் பற்றாக்குறை பட்ஜெட் போடுகிறது? ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளின் பொருளாதாரம் ஏன் தள்ளாடுகிறது? ஜப்பானில் ஏன் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது? இவையெல்லாம் “வளர்ந்த” நாடுகள்தானே? அப்போது இந்தியாவும் வளர்ந்துபிறகு அப்படித்தான் இருக்குமா? அதற்கு வளராமலேயே இருக்கலாமே?

அடிப்படையில் எனக்கு பொருளாதாரமே புரியவில்லை என்பதுதான் பிரச்சினை. படிக்காததால் புரியவில்லை என்பதல்ல. படிக்க, படிக்க புரியாமை அதிகரித்துக்கொண்டே போவதுதான் பிரச்சினை. ஆனால் நாம் வாழ்வதோ அரசியல் என்பதே பொருளாதாரம்தான் என்று முடிவாகிவிட்ட காலம். பங்குச்சந்தை நிலவரங்கள் புனிதமான அந்தஸ்தை பெற்றுவிட்டன. தேசத்தின் ஆரோக்கியமே பங்குச்சந்தை குறியீட்டு எண்ணில்தான் இருக்கிறது. தமிழ் தொலைக்காட்சிகளிலும் இப்போது பங்குச்சந்தை நிலவரங்களை விரிவாகச் சொல்கிறார்கள். எனக்கு மாட்டு சந்தை, காய்கறி சந்தை எல்லாம் புரிகிறது. பங்கு சந்தை என்றால் என்னவென்றே புரியவில்லை. அதை விளக்கி ஏன் பங்குச்சந்தை தேசத்தின் ஆரோக்கியத்தின் அறிகுறி என்று யாராவது சொல்லித் தந்தால் பரவாயில்லை.

ஆனால் எனக்கு ஒன்று புரிகிறது. பங்குச்சந்தை வளர்ச்சி என்பது முதலீட்டின் பெருக்கம். முதலீடு பெருகினால் அது சும்மாயிருக்க முடியாது. எதையாவது உற்பத்தி செய்துதான் தீரவேண்டும். உற்பத்தியாகும் பொருட்களை யாராவது நுகர்ந்துதான் தீரவேண்டும். ஒட்டுமொத்தமாக உற்பத்தியும், நுகர்வும் அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான் பொருளாதார வளர்ச்சி. எனக்கு இதில் எந்த ஐயமும் இல்லை. பிரச்சினைதான் இருக்கிறது. நுகர்வு தேவையா? உற்பத்தி தேவையா என்ற கேள்வியை யார் கேட்பது? முதலீட்டியத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சியில் சக்கரை என்ற, அதுவரை மானுடம் பொருட்படுத்தியிராத வஸ்துவின் புதிய வடிவத்தை எல்லோர் வாழ்க்கையிலும் தேநீர், காப்பியின் மூலம் இன்றியமையாததாக மாற்றியிதற்கு முக்கிய பங்கு இருக்கிறது. அந்த காலத்தில் காப்பி இல்லை; தேநீர் இல்லை என்பது மட்டுமல்ல – சக்கரையும் இந்த வடிவில் இருக்கவில்லை. அடுத்தது புகையிலை. அது பற்றி நான் கூறவேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். அல்லது சர்ச்சில் உறையூர் சுருட்டுத்தான் குடிப்பார் என்று பெருமைப்படுவதை கடந்து, புகையிலை என்றால் என்ன என்று யோசிக்கத்தொடங்கினால் புரியும். சோழர் காலத்தில் என்ன உறையூரில் புகையிலையா பயிரிட்டார்கள்?தேவையற்ற பொருள்களை இன்றியமையாததாக மாற்றி அவற்றின் உற்பத்தியையும், நுகர்வையும் பெருக்குவதுதான் முதலீட்டியம் என்று நான் புரிந்துகொள்கிறேன். அதன் முற்றிய வடிவம்தான் அணு உலை.

அணு உலைக்கு மாற்றாக காற்றாடிகள், சூரிய ஒளி போன்ற சுய பெருக்கம் செய்துகொள்ளும் (renewable) ஆற்றல்களின் மூலம் மின்சாரம் தயாரிக்கலாமே என்று சொல்பவர்கள் வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்வதில்லை. மின்சாரத்தேவை என்பது ஏதோ ஒரு நிலையான அளவினை கொண்டது  என்பதுபோலவும், அந்த நிலையான அளவினை எந்த வகையில் பெறலாம் என்பது போலவும் பேசமுடியாது. ஆண்டுக்கு ஒன்பது சதவீத வளர்ச்சி என்பது இப்போதைய இலட்சியம்தான். அஹுலிவாலியாவுக்கு பதில் பஹூலிவாலியா வரும்போது பன்னிரண்டு சதவீத அல்லது இருபது சதவீத வளர்ச்சி அவசியம் என்று முடிவு செய்யலாம். ஆகவே எப்படியெல்லாம் மின்சாரம் தயாரிக்க முடியுமோ அப்படியெல்லாம் தயாரித்துத்தான் தீரவேண்டும். உலக அளவில் உற்பத்தி செய்யச் சாத்தியமான அனைத்தையும் உற்பத்தி செய்துதான் தீரவேண்டும். உற்பத்தி பொருட்களில் ஒன்றுதான் அணு உலை. அவற்றை உபயோகித்துதான் தீரவேண்டும். அணு ஆயுதங்களையும் ஆத்திர அவசரத்திற்கு தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆயுதங்கள் போணியாகவில்லையென்றால் இரண்டு நாடுகளிடையே பிரச்சினைகளை கிளப்பி அவற்றை விற்றாகவேண்டும். போதைப்பொருட்கள், கள்ள மார்கெட் ஆயுதங்கள், மாஃபியா, கிரிமினல் கும்பல்கள் என்ற நிழல் பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும். வளர்ச்சி என்றால் சும்மாவா? பிரமாதமாக நம் நகங்களை பாலிஷ் போட்டு வளர்த்து நம் கண்ணையே குத்திக்கொள்ளும் கலை அல்லவா அது?

நாளைய காந்தி  

காந்தியை மறுவாசிப்பு செய்வதென்பது இந்திய சிந்தனையாளர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு காலகட்டம் (அதாவது அவர்கள் தொடர்ந்து சிந்தித்தால்). தமிழ் சிந்தனையாளர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. மறுவாசிப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. ஏதோவொரு விதத்தில் அதை தவிர்க்க முடியாது என்பதுதான். காந்தியை வாசிப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. சமகால வாசிப்பில் பல ஒவ்வாமைகளை நாம் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும். ஆனால் காந்தியின் சிந்தனைகளில் புறக்கணிக்க முடியாத சில அம்சங்கள் இருக்கின்றன. அவரது “இந்து சுயராஜ்யம்” என்ற நூல் இந்த வகையில் முக்கியமானது. இதை நான் குறிப்பிடுவது பலருக்கு பிடிக்காது என்று எனக்குத் தெரியும். இந்துத்துவ சிந்தனை மரபு அவரைக் கொன்றே போட்டது. மார்க்ஸீய, நேரூவிய, பெரியாரிய, அம்பேத்கரிய விமர்சன மரபுகள் காந்தியின் சிந்தனைகளுக்கு எதிராக பல முக்கிய கருத்துக்களை வைத்துள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் அங்கீகரித்த பின்னும், பல விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட பின்னும் வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ள நமக்கு காந்தி முக்கியமான ஆதாரமாகிறார்.

இந்து சுயராஜ்யம் நூலின் மூலம் காந்தி மிக முக்கியமான திருப்புமுனையை இந்திய அரசியலில் ஏற்படுத்தினார். அதுவரை வெள்ளைக்காரர்களிடம் அதிகாரப் பகர்வு, சுயாட்சி என்ற அடிப்படையில் இயங்கி வந்த அரசியல் சொல்லாடலை முற்றிலும் புதிய திசையில் திருப்பினார். வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருப்பதோ, ஆட்சி செய்வதோ பிரச்சினையில்லை, ஆனால் அவர்கள் நாட்டின் நவீன உற்பத்தி முறை மற்றும் அரசியல் நிர்வாக அம்சங்களை இங்கே இறக்குமதி செய்யக்கூடாது என்றார். வேறு வார்த்தைகளில் சொன்னால் இந்திய மக்கள் அவர்கள் வாழ்வை மேற்குலகிலிருந்து வேறுபட்ட விதத்தில் வடிவமைத்துக்கொள்ளும் உரிமையைப் பெறுவதே சுயாரஜ்யம் என்றார். எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் நடப்பது போலவே அவர் மஹாத்மாவாக்கப்பட்டார், ஆனால் அவர் கருத்திற்கு நேர்மாறாக ஆட்சியதிகாரம் மட்டுமே இந்தியர்கள் கைக்கு வந்தது. இந்தியா மேற்கத்திய உற்பத்தி மற்றும் நிர்வாக வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கியது. இந்தியா வல்லரசாக மாறவேண்டும் என்பது அனைவரும் சூல்கொள்ள வேண்டிய மனக்கிடக்கையாக மாறியது. எதற்காக இந்தியா வல்லரசாக வேண்டும்; உகாண்டாவோ, சிலியோ, நேபாளமோ, மாலத்தீவோ உலக வல்லரசாக மாற முடியுமா? அப்படி மாறாததால் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினையா என்று யாரும் யோசிப்பது சாத்தியமற்றுப் போனது. முதலீட்டிய நவீன தேசிய அரசு என்ற நோய் எங்கும் பரவியது.

வளர்ச்சி என்பது என்ன, எதற்காக எந்த அளவு அது தேவை, மின்சாரம் என்பது இன்றியமையாததா, நம்முடைய மின்சாரப் பயன்பாடுகளில் எவையெல்லாம், எந்தக்காரணங்களால் இன்றியமையாதவை என்பதையெல்லாம் கேட்காமல் அணு உலையை எதிர்ப்பதற்கான தத்துவ தளத்தை உருவாக்க முடியாது. இல்லையென்றால் “சாலையில் போனால் விபத்து நடக்கலாம் என்பதற்காக சாலையில் போகாமல் இருக்க முடியுமா?” என்பது போன்ற அபத்தமான, சோப்ளாங்கி தர்க்கங்கள்கூட அணு உலை எதிர்ப்பை பரவாமல் தடுத்துவிடும். அணு உலை எவ்வளவு அபாயமானது என்பதை மட்டும் பிரசாரம் செய்வது ஒரு பக்கச் சார்பானது. அந்த ஆபத்தை எதற்காக நாம் எதிர்கொள்ளவேண்டும் என்ற கேள்வியை முன்னெடுக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன, எதற்காக என்ற கேள்வியை கையிலெடுக்காமல் அணு உலை எதிர்ப்பிற்கான தத்துவ அடிப்படைகளை வலுப்படுத்த முடியாது. இருபத்திரண்டு வயதில் இந்து சுயராஜ்யம் படித்தபோது “மனிதனுக்கு கால்கள் போதுமென்றுதான் கடவுள் அவற்றைக் கொடுத்திருக்கிறார்; சக்கரங்கள் தேவையென்றால் கால்களுக்குப் பதில் சக்கரங்களை வைத்திருப்பார்” என்ற காந்தியின் வரிகளைப் படித்துவிட்டு வாய்விட்டுச் சிரித்தேன். ஆனால் அந்த வரிகளில் தேவை எது, இன்றியமையாதது எது என்பதை வேறுபடுத்திப் பார்க்கச்சொல்லும் தத்துவம் ஒளிந்திருப்பது இப்போதுதான் புரிகிறது.

நம்மால் செய்வதற்குச் சாத்தியமானதையெல்லாம் நாம் செய்தாகவேண்டயது அவசியமில்லை. தலைமுடியுடன் ஆட்டுக்கல்லை இணைத்துக்கட்டி இழுக்கலாம் என்பதால் தினசரி அதை செய்யவேண்டியதில்லை. அதே போல உற்பத்தி செய்ய முடிவதையெல்லாம் உற்பத்தி செய்தாக வேண்டும், நுகர முடிவதையெல்லாம் நுகர்ந்தாக வேண்டும் என்பது அவசியமில்லை. முதலீட்டியத்தின் பத்மாசுர வடிவம் அதைத்தான் செய்கிறது. யார் தலையில் கைவைத்தாலும் அவர்களை அழிக்கும் ஆற்றலை பெற்ற பத்மாசுரன் தன் தலையில் தானே கையை வைத்துக்கொண்டு அழிந்தான். ஆனால் முதலீட்டியம் தன் தலையில் தானே கைவைத்துக்கொள்ளும்போது அழியப்போவது அதை செயல்படுத்தும் மானுடம்தான்.

***

Views represented in this piece belong to the author and not everyone part of Chai Kadai. It is presented here as it is a necessary analysis to add to the dialogue on energy, violence and development. Please share. 

(will be translated in English soon)

What are you thinking about?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s